திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.100 ஆதி புராணம் - திருக்குறுந்தொகை
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
1
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனுந்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
2
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராணய ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.
3
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம்
மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.
4
கூவ லாமை குரைகட் லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
5
பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
6
எரி பெருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.
7
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.
8
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
9
அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com